Archive for the ‘Stockholm Syndrome’ Category

Stockholm syndromeஉம் தமிழ்க்கலாச்சாரமும் – 5

ஜூலை 13, 2007

முன்குறிப்பு: கண்டிப்பாய் படித்துவிட்டு வரவும்:  Stockholm syndromeஉம் தமிழ்க்கலாச்சாரமும்-4

மற்ற முந்தைய மூன்று பதிவுகளும்:

முதல் பதிவு         இரண்டாம் பதிவு          மூன்றாம் பதிவு

*******இப்பொழுது பதிவு:***********

 

“என்ன கொண்டுவந்தாய்?”

“வடிவான இடுப்பும் வளமான முலைகளும். தேடிப் பிடித்தேனாக்கும்”. பெருமை முகத்தில்.

“முதற்சில நாட்கள் தாங்கும். உன் அம்மாவின் சோறும் இருட்டுவீட்டில் உணவும், நீ வீடு திரும்பும் நேரங்களில் வாகாய் இருக்கும், வடிவான இடுப்பும் வளமான முலைகளும், இருண்ட அவள் அறையும். என்ன செய்வாய் வெளிச்சத்திற்கு வந்தபின்?”

“கருப்பொன்றுமில்லை, கண்குருடோ காதுசெவிடோயில்லை. விரல்கள் பத்தும் சேமம். கையும் காலும் நீளங்கள் சரியே. வெளிச்சத்திற்கு கொண்டுவருவதில் பயமேதுமில்லை.”

“வாய்திறந்து கேட்டாயோ மூடா?”

“குரலில் பாங்கில்லை, கதறும்போது கவனிக்கத்தான் செய்தேன். “

“நம் மொழி பேசுவாளா கவனித்தாயா? வாய்பேசாத வாசுகி, இறைக்கும் வாளி நிறுத்த நில் என்று சொல்லுமட்டும் வள்ளுவரும் மகிழ்ந்து போய்தான்  இருந்தார், அழைப்பு கேட்டு வந்தாளல்லவா உடனே. ஆனால், தெரியுமா சேதி, அவரே பின்னர் கேளாதே கேளாதே பெண்பேச்சுக் கேளாதே என்று கதறினாராக்கும், நில் என்று சொன்ன வாய் அத்தோடு நிற்காமல் மற்றதும் பேசப்போய் வள்ளுவரும் கதறவேண்டியதாயிற்று தெரியுமோ சேதி?”

“என்ன சொல்லவருகிறாய்? ஒன்றும் புரியவில்லை, உன் உளறலும் தெளிவாயில்லை. இனம் பெருக்க பெண்வேண்டும், எதிரிகூட்டத்தவளாயிருக்கவேண்டும்.  பிள்ளைகள் பெற தகுதியிருக்க வேண்டுமென்றுதானே அய்யனும் சொன்னார்.  பேசினால் பிள்ளை பிறக்காதா? விளங்கும்படிதான் பேசேன். என் சிற்றறிவுக்கு எட்டும்படி தான் எடுத்தியம்பேன் என் மூத்தோனே. “

“மூடா, கேள். மெல்லச் சொல்லுவேன் படிப்படியாக. எங்கு பிடித்தாய் சொல் முதலில்”.

“காட்டில் ஒரு ஆற்றங்கரையில், ஒரு பழமரத்தடியில், ஏதே தேடுவதுபோன்ற பார்வையுடன், மான்களும் மயிலும் பக்கத்தில் பழக்கமாய் இருக்க, பூத்தொடுத்துக்கொண்டிருந்தாள் என் தேவதை.”

“மோசம்போனாயா மூடா, வீடுவிட்டு காடு வந்தவள் வெளிச்சம் தெரிந்தவளாயிற்றே, தாய்பேச்சு மறுத்து தனியே வந்தவளாயிற்றே. மான்களும் மயிலும் பழகிப்போகும்படி மொழிகள் தாண்டி எல்லாம் பேசுவாள் போலிருக்கிறதே. மோசம் போனாயே மூடா. உனக்கோ நான்பேசுவது புரியவே அரிதாயிருக்கிறது. தோழனின் வாழ்க்கை பார்த்தும் பழகவில்லயா நீ. காடுதேடி திரும்பிப்போனாளே  உன்தோழனின் தேவதை, என்ன புரிந்தது உனக்கு?. பேசினாள்தாள் முதலில், முத்து குலுங்கினாற்போல். உன் தோழனுக்கும் பெருமைதான். பேசினாள் தான் பின்னரும், நம் மொழியையும் பிள்ளை கொஞ்சினாற்போல். கிள்ளைமொழிக்காரியென்று ஊரே புகழ்ந்ததே  மறந்தாயே சிறுஞாபகக்காரா. பேசிக்கொண்டிருந்ததை நிறுத்திவிட்டு சிரிக்கவும் மறுத்து காடுதேடிப் போனாளே அவள், அதையும் மறந்தாயோ? என்ன புரிந்தது உனக்கு?”

“பார்த்தேனே பார்த்தேனே தோழனின் பெண்ணை. என் தேவதைக்குப் பின்னால் ஒரு புதரில் விழுந்து கிடந்தாளே. எந்தேவதையைக் கொள்ளும்போது சிரிக்கவும் செய்தாளே மெல்ல, ஒருபுறமாக, லேசாக இழுப்பது போன்று. என் தேவதையும் பார்த்தாள் அவளை, தவறாமல் திரும்பி. ஏனென்றும் புரியவைல்லை. முலைகள் மறைத்ததில் வேறொன்றும் தெரியவில்லை”.

“கெட்டாயே மூடா. இன்னும் கெட்டாயே.  அந்தப் பெண்ணின் தோழிதானோ இவள், இன்னும் கெட்டாயே மூடா. தாய்பேச்சு மறுத்து காடுவந்தவர்கள் இப்பெண்கள். தந்தைகளும் தமையன்களும் கூடப் பேசித்திரிந்தவர்கள் இப்பெண்கள். காடுகளும் தெரியும் கல நெல்லும் தெரியும் இவர்களுக்கு. கேள்விகளுக் கேட்பார்கள், சமைக்கும் நேரம்போக யோசிக்கவும் செய்வார்கள்.”

“பாங்கென்ன மூத்தோனே, பிள்ளைபெறுவாள்தானே தவறாமல். நேற்று இருட்டு அறையில் நீ சொன்னதும் செய்தேனே. கண்டிப்பாய் பிள்ளை பெறுவாள்தானே மூத்தோனே. “

வருத்தமாயிருந்தமுத்தோனுக்கு அவன் கவலையற்று வேறேதும் புரிவதாய்த்  தெரியவில்லை.  மூடனென்ற பேரோ எனக்காய்விட்டது.  மூத்தோனை மறுக்கவும்தான் இயலுமா  என்னால்? அடியும் கடியும் குத்தலும் குதறலும் கதறலுக்கு செவிடும் கட்டிப்போட்டு இருட்டும் சொல்லிக் கொடுத்தான்தானே.  மூத்தோனை மறுக்கவும்தான் இயலுமா எனக்கு?

“இன்னும் ஒன்றும் பாகுபட்டில்லை. பூதானே தொடுத்தாள், பழமரம்தானே விரும்பினாள்… ஒன்றும் பாகில்லை இன்னும். சென்று சொல், அவளுக்கு சிறுமூளையென்று”.

“நான் சொன்னால் போதுமா. அத்தனை நம்பிக்கையா என்மேல் அவளுக்கு?”

“மூடா மூடா முழுமூடா, அவள் நம்பவா நாம் சொல்கிறோம். நாம் நம்ப. நமக்கிருக்கும் பயம் அகற்ற”.

“என்ன பயம் உனக்கு? எனக்கேதும் பயமில்லை. ஆம், அவள் என்மேல் விருப்பம் காட்டவில்லைதான். கதறலில் ஏதும் மகிழ்ச்சி தென்படவில்லைதான். பூவாய் லகுவாய் வந்த உடம்பில் அத்தனை காயம் பார்த்து எனக்கே சிறிது வருத்தம்தான். அவளும்தான் என்ன செய்வாள்? பயமா, அவளிடமா, எதற்கு?  காயம்பட்ட உடம்புக்காரி என்ன செய்துவிடமுடியும்? வேலெறிவாளா அம்பு வீசுவாளா? கட்டிபோட்ட கயிறும் ஓங்கி அடித்த கழியும் தாக்கமானவைதானே. என்ன பயம் உனக்கு? இன்னும் அடிக்கவா சொல், மறுக்காமல் செய்வேன். மற்ற உன் உளறல் எனக்கு விளங்கவும் இல்லை அவளிடம் எனக்குப் பயமும் இல்லை. புரியும்படி பேசுவது உனக்கு மற்ந்துபோய்விட்டதா, இல்லை பூதம்தான் கண்டுவந்தாயா? அவளிடம் என்ன பயம் உனக்கு? “

“நம் கூட்டமே பயப்படுகிறது இந்தப் பேச்சுக்கார பெண்களைப் பார்த்து. இதற்குமேல் தெரியாது எனக்கு, சொல்லவும் முடியாது என்னால். நேற்று கூட்டத்தில் நாட்டாமையும் சொன்னார் பயம்தேவையில்லை, அவர்களுக்கு  சிறுமூளைதான் என்று. நாலுமுறை உரக்கச்சொன்னால் தெளிவாய் உண்மையாய் தெரிந்தது. மற்றபடி வேறு ஏதும் எனக்கும் தெரியாது. மறுபடியும் சொல்லிக்கொள் அவர்களுக்குச் சிறுமூளைதான் என்று. பூக்களும் பழங்களும் மட்டும்தான் மயிலும் மானும் மட்டும்தான் என்று உரக்கச்சொல், உன்னவள் அருகில் சென்று. நாம் சிங்கம் வென்றும் புலி வென்றும் வருவோம் அதற்குப் பெருமூளை வேண்டுமென்று உரக்கச்சென்றுசொல்”.

“வேலல்லவா வேண்டும் பெரிதாக, சிங்கமும் புலியும் கொல்ல? வெலென்று மூளையானது?”

“மூடா மூடா, கேள்விகேட்காதே. கேள்விகள்தாம் நம் எதிரியே. நன்றாய் தெரிந்துகொள், நீயும் கேட்காதே, அவளையும்  கேட்கவிடாதே.  நீயும்  யோசிக்காதே,  அவளையும்  யோசிக்கவிடாதே.  உரக்கச்சென்றுசொல் அவர்களுக்கு சிறுமூளையென்று.  தராக மந்திரமாய் ஞாபகத்தில் கொள். யோசனையோ கேள்வியோ வந்தால் கண்ணை மூடிக்கொள். உலகம் இருண்டுகிடக்கும் அப்போது. இருட்டுதான்  நம்  துணை  தெரிந்துகொள்.  மானும் மயிலும் உனக்கு, சிங்கமும் புலியும் எனக்கு என்று கண்டிப்பாக திட்டவட்டமாக்ச் சொல்லிவிடு. மானும் மயிலும் பழகச்சொல். கொல்லுவது நம் உரிமை, சொல்லிவிடு அவளிடம். வேலோ அம்போ கண்ணிலும் காட்டாதே. முன்னமே தெரியுமென்றால், மழுங்கச்செய்துவிடு.  சிங்கமும் புலியும் கொல்ல எங்கள் பெரூமூளை வேண்டுமென்று மறக்காமல் சொல் அவளிடம் சற்றே உரத்து”.

அவள் யோசனையை நான் எப்படித்தடுக்க முடியும்? அவள்  யோசிக்கவில்லை   என்று  நான்  சொல்லிக்கொள்ள  என்ன  நடந்துவிடும்?   மூத்தோன்  பேச்சை  மறுக்காதேயென்று  அய்யனும்  சொன்னார்,  அம்மையும்  சொன்னார்.  மூத்தோன்  சொன்னால்  சரியே.  எனக்கு  நானே  தராக  மந்திரம்  உரக்க  சொல்லச்  சொன்னான்.  சொல்லிக்கொண்டு  கண்களை  மூடி  உலகத்தை  இருளச்செய்யச் சொன்னான். அப்படியே  ஆகட்டும்.  ஆனாலும்…  

குழம்பிய மனதுடன் திரிந்தபோது நொச்சி மரம் கண்டேன். தலைவலியென்று சொன்னாளே. நொச்சி பறித்தேன். முதல் முறுவல் பார்த்தேன் அவள் முகத்தில் அன்று. பூமுள் குத்தப் பதறியும் போனேன் மற்றொருநாள்.  

கூரையொலொன்றும் குலுக்கையிலொன்றுமாய் காய்ந்த நொச்சி காத்துவைத்திருக்கக்  கண்டெடுத்தேன்.  

**********

சில இணைப்புகள்:

Stockholm syndrome

Lima Syndrome

PostScript: This is post was influenced by some happenings in the Tamil blogworld. It will be rewritten and toned down in order to make it worthy enough to be archived along with other posts in the stockholm syndrome series.

Stockholm Syndromeஉம் தமிழ்க்கலாச்சாரமும் – 4

நவம்பர் 5, 2006

முதல் பதிவு         இரண்டாம் பதிவு          மூன்றாம் பதிவு

எனக்கு தூக்கமேயில்லை. நான் காரணமாக இருந்துவிட்டேனே என்பதை என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அம்மா சொன்னார்கள்; எத்தனையோமுறை சொன்னார்கள். தனியாக போகாதே, அடுத்த கூட்டத்துக்காரன் எவனாவது வந்து  தூக்கிச்செல்வான்; அவன்தன் கூட்டம் பெருக்குவான்; நம் கூட்டம் குறைந்து பகைவன் கூட்டம் கூட நீ காரணமாகிவிடப்போகிறாய் என்று. அப்பொழுது எனக்குப் புரியவில்லை. தோழி சொன்னாள், ராஜகுமாரன் குதிரையில் வருவான் என்று. கனவு அழகாய் இருந்தது. குதிரையில்தான் வந்தான் என் ராஜகுமாரன். நான் அதிகம் எதிர்க்கக்கூடவில்லை. வாரி என்னைக் குதிரையில் போட்டபோது வலிகூட இதமாய்த்தானிருந்தது. அண்ணன்கூட மதினியை இப்படித்தான் கொண்டுவந்தான். அவளை அண்ணன் கொண்டுவந்த முதல்நாள் எனக்குப்பொறாமையாய் இருந்தது. இத்தனை நாளும் என்னைக் குறைகூறிய அண்ணன், என்னெல்லாம் என்குறையாகச் சொன்னானோ அதெல்லாம் அப்படியே, ஏன் இன்னும் ஒருபடி கூட,  இருந்த மதினியிடம் மயங்கி அவளது ராஜகுமாரனாய் அமைந்து அவளைக்கொண்டுவந்தான். எனக்கு மதினியைப் பிடிக்கவேயில்லை. அவளும் வந்த புதிதில் எங்களிடம் எல்லாம் எதிரிபோல் நடந்துகொண்டாள். எதிரி கூட்டத்துக்காரிதானே, அப்படித்தானிருக்கும் என்று அம்மா சொன்னார்கள். எனக்குக்கோபம். என் அண்ணன் உனக்கு ராஜகுமாரனாய் கிடைக்க நீ கொடுத்து வைத்திருக்கவேண்டும் முட்டாள் மதினியே என்று நினைத்துக்கொண்டேன். நல்ல வேலைக்காரன் என் அண்ணன்;  ரெண்டுதோட்டம் தானே பார்ப்பான். கலம் நெல் கொண்டுவருவான். என்னை என் ராஜகுமாரன் தூக்கியபோது எனக்குப் பெருமையாக இருந்தது. நான் அழகுதான், விரும்பத்தக்கவள்தான் என்று நிரூபணமானது அந்தநாள்தான். எதிர்க்கவேயில்லை நான்.  தோழி தூக்கப்பட்டு போன போதும் எனக்குப்  பொறாமையாயிருந்தது.  நாங்கள்  இருவரும் இருக்கும்போது அவன் அவளை  விரும்பி  தூக்கியபோது  எனக்குப்  பொறாமையாயிருந்தது.  தோழி தூக்கப்பட்டு சென்றபின்  வெகுநாட்கள் கழித்து ஒருநாள் திரும்பி வந்தாள்,  நாங்கள் விளையாடுவோமே  அதே காட்டுக்கு,  அதே மரத்தடிக்கு.  நான் அப்போதும்  எங்கள்  கூட்டத்தில்தானிருந்தேன்.  களைத்து இளைத்திருந்தாள்.  ராஜகுமாரனுடன்  சென்றாயே  எப்படி  வாழ்க்கை  என்று கண்ணடித்தேன்.  சிரிப்பிழந்த அவள்முகம்  எனக்கு  குழப்பத்தையும் வருத்தத்தையும் தந்தது.  அதிகம்  பேசவில்லையவள்.  வாயாடிப்பெண்ணா இப்படி  என்று  புரியாமல் நின்றேன். காட்டிலேயே தங்கிவிட்டாள். பழம் கனி  போதும்  ஆறு  மரம்  போதும்மென்றாள்,  வாய் திறந்த ஒருமுறை. தன்  குடும்பம்  பார்க்க  மறுத்துவிட்டாள்.  புரியவில்லையெனக்கு. என் ராஜகுமாரன்  என்னைதூக்கும்போது  அங்குதானிருந்தாள். அவள் ஏதும் சொல்லவில்லை.  அந்த நாள் எனக்கு மிகவும் சந்தோசமான நாளாகத்தானிருந்தது.  குறையேதும் சொல்லமுடியாது என்னால்.

முதல்நாள் எங்கள் வீட்டில் மதினிக்கு நடந்ததுபோல் விருந்து நடந்தது. குழப்பமாய் இனம் புரியாத வருத்தமாய் இருந்தேன். விரும்பித்தானே வந்தோம், ஏன் என்குடும்பம் கண்ணில் நிறைய, கண்ணை மறைக்க, ஏன் எண்ணங்கள் மூச்சு முட்ட?  இனி எப்போ பார்ப்பேன் அப்பாவை? எறும்பு கடித்தால் பதறுவாரே. தெரியுமா அவருக்கு எனக்கு எத்தனை கடி என்று, எவ்வளவு பெரிய எறும்பென்று?  பூமுள் குத்த ஓடிவந்தானே அண்ணன், தெரியுமா அவனுக்கு எத்தனை பெரிய முள் என்று,  எங்கு குத்தியதென்று?  மேலேறி அமுக்கினான். திணறினேன். காலங்காலமாய் காத்துவைத்த  மானம் கலைத்தான்.  கைவைத்தான்.   கண்பார்த்தான்.  மூச்சுமுட்ட போராடினேன்.  இதுவா  ராஜகுமாரான்தனம்?  இதற்கா குடும்பச்சொல் கேட்காமல் அலைந்தேன்?  எப்படிப்பார்ப்பேன் அவர்களை மறுபடியும்,  எந்த முகத்தில் பார்ப்பேன்?  பூமுள்ளுக்கு  ஓடிவந்த அண்ணன் எங்கு போனான் என் மானமே போனபோது? உன்கூட வந்திருப்பேனே அப்பா,  எனக்கும்  தோட்டம்  பார்க்கச்  சொல்லிக்கொடுத்திருந்தால் உன்னுடனிருந்திருப்பேனே ஐயா, நீ என்னுடனிருந்திருப்பாயே  ஐயா.  நீயிருந்திருந்தால்  என்னை  எவனும்  துக்கியிருப்பானா?      எதிரிகூட்டம்  பெருக நான்  காரணமானேன் என்று தோழியின் அம்மாவுக்கு விசாரணை நடந்ததுபோல் என் அம்மாவிற்கும் நடந்திருக்கும். பாவம்; சொல்லத்தான் செய்தாள்.

தோழிபோல் காடு சேரமாட்டேன். அண்ணன் மகனுக்கு என்மகள் தருவேன். கடன் கழிப்பேன். சொல்லிவளர்ப்பேன் மகளை. இனம்பார்த்து சேர்ப்பேன். இனம் பெருக்குவேன். கடன் கழிப்பேன்.

என்ராஜகுமாரன் அப்படியொன்றும் மோசமில்லையே. தலைவலிக்கு நொச்சியிலை கொண்டுவந்தானே அன்று.  தெரியாதா எனக்கு, நொச்சிதேட உச்சிமலை போகவேண்டுமென்று, எதிரி கூட்டம் தாண்டவேண்டுமென்று? நொச்சி கொண்டுவந்தான் அன்று.  அதிகம் பேசவில்லை. முதல் முறுவல் பார்த்தான் என்முகத்தில்.  பூமுள் குத்த பதறியும் வந்தான் மற்றொருநாள்.  என்னைவிட்டால் அவன் தலைவலி யார்பார்ப்பார்? நொச்சியிலை சேர்த்துவைத்தேன்.  பின்னொருநாள் அவனுக்கு தலைவலித்தால் எங்குபோவேன்   நொச்சிக்கு? 

குலுக்கையில்  வைத்தோ  கூரையில்  வைத்தோ நொச்சி  பாதுகாத்தேன். 

Stockholm Syndromeஉம் தமிழ்க்கலாச்சாரமும் – 3

ஒக்ரோபர் 21, 2006

கொஞ்சம் பழங்காலத்திலேர்ந்து ஆரம்பிப்போம்.

வேட்டையாடி சாப்பிட்டுக்கிட்டிருந்த மனிதன் விதைச்சு அறுவடை செய்ஞ்சு ஓரிடத்தில் தங்கி நிலபுலன்களை வளமாக்கி வாழ ஆரம்பிச்சப்போ manpower ங்கிறது ஒரு முக்கியத்தேவையாயிருந்தது.  தன் கூட்டத்திலிருந்து யாரையும் இழந்திடாம இருக்கிறதே மிகப்பெரிய வரவாகும்.  சில கலாச்சாரங்களில் incestuous relationship உருவானதும் இந்தக் காலமாகத்தான் இருக்க வேண்டும்.  (சின்னக் கிளைக்கதை: கிளியோபட்ராவின் தகப்பன் இறந்தபின் நேரடி வாரிசான கிளியோபட்ராவின் தம்பி மிகச்சிறுவனாக இருந்ததாலும் அரசாங்கம் மிகப் பெரிய தடுமாற்றத்தில் இருந்ததாலும், அமைச்சர்களும் நலம் விரும்பிகளும் சேர்ந்து கிளியோபட்ராவுக்கும் அவரது தம்பிக்கும் திருமணம் செய்துவைத்து பரம்பரையைக் கைமாறாமல் பாதுகாத்தனர். சரித்திர புகழ் வாய்ந்த incestuous உறவுகளில் இதுவும் ஒன்று).  ஒரு கூட்டம் தன் உறப்பினரை இழக்காமல் பாதுகாப்பதுடன், அடுத்த கூட்டத்திலிருந்து கடத்திட்டு வந்து ஆள் சேர்க்கிறது அடுத்த கட்டம்.  பெண்களைத்தூக்கிட்டு வந்து தனது உரிமையை கோரும் வழக்கம் உருவானது இந்தக் காலமாகத்தானிருக்க வேண்டும்.

மேலும் படிக்க

Stockholm Syndromeஉம் தமிழ்க்கலாச்சாரமும் – 2

ஒக்ரோபர் 14, 2006

Balajiயின் கமெண்ட்டுக்கு ஒரு பதிவா பதில் சொல்றேன்.  

Balaji,
மாயாவி படம் விமர்சனம் படிச்சேன்.
//Just about when the whole industry and her family tries to trace Jyothika, she understands the real Balaya. All ends in a tacky and slightly laborious climax.//

“understands the real Balaya” is different. (அப்படித்தான் நம்ம தமிழ்நாட்டுல மாத்திக்குவாங்க. ஹீரோவ நல்லவனாக் காட்டி காதல வரவழைச்சு… ஒரு பாட்டெல்லாம் கூட பாடுவாங்க).

குணா படம். கரெக்ட்டா சொல்லணும்னா.  Stockholm Syndrome. தலைவர் தெளிவா எடுக்கல. 😦   🙂 

Stockholme sundrome-னா கடத்திட்டு போறது மட்டுமில்ல, rapist மற்றும் தன்னை அடக்கி வைச்சிருக்கிற தன்னோட மாஸ்டர் மேல வர்ற bondage. It is a psychological issue.
It comes from the hatredness that she was not protected at that time of the event. It comes from self pity. It comes from angry at her close person (mostly her father) whom she trusted that he will take care of her in her life. அந்த வெறுப்பு, பழிவாங்குற (தன் தகப்பனாரை) பைத்தியக்காரத்தனமான உணர்வா மாறி, யார்கிட்ட தான் கஷ்டப்பட்டோமோ (rapist or kidnaper in this case) அவங்ககிட்டயே அடுத்த protectorஐத்தேட ஆரம்பிக்கும். தன்னோட மாஸ்டர் காட்டின சின்னச்சின்ன கரிசனங்கள் மட்டுமே மனசில் நிக்கும்.

அடுத்த டோஸ் அடுத்த வாரம் வைச்சுக்கலாம். 🙂

Stockholm Syndromஉம் தமிழ் கலாச்சாரமும் – 1

ஒக்ரோபர் 10, 2006

 classic case of Stockholm syndrome படிங்க. தமிழ் கலாச்சாரம் இதுல எங்க வருதுன்னு என்னய கேட்காம நீங்களா கொஞ்சம்  யோசிங்க. தொடர்ந்து எழுத்தத்தான் போறேன். நிறய நாளிருக்கு; மெதுவா ஆறஅமர திட்றதோ பாராட்றதோ செஞ்சிக்கலாம்.

வாரக்கடைசிலதான் போடணும்னு நினைச்சிருந்தேன். இந்த article எடுத்துட்டு வந்தே மூணு வாரமாகுது. அதோட I expect என்னோட most recent post to create some stir. so, ஆரம்பிச்சுடலாம். அதான் நல்லதுன்னு போட்டுட்டேன்.

பத்மாவோட சமீபத்தய பதிவுக்கும் (அஞ்சலுக்கும்? (இடுகை-ன்னு சொல்ல எனக்குப்பிடிக்கல. இன்னோரு நாள் இதப்பத்தி பேசலாம்)), இந்த stockholm syndrome-க்கும் சம்பந்தம் இருக்கிறதா நான் நினைக்கிறேன்.