Archive for the ‘Gender difference’ Category

பிறக்கும் பெண்

மே 10, 2007

எனக்கு சமைப்பது ரெம்பப் பிடிக்கும். நாக்குக்கு ருசியா சாப்பிடுவது அதவிடப் பிடிக்கும். நன்றாக சமைப்பேனும் கூட. (நம்பாதவர்களைப் பற்றி எனக்கு கவலையில்லை).. வீட்டை ஒழுங்காக வைத்திருப்பது எனக்கு ரெம்ப பிடித்த ஒன்று. எனக்கு சுலபமாய் வரும் இந்த வேலை பாலனுக்கு சரியா வராது. ஒரே நாள் சமையல் கட்டுல விட்டாப் போதும் கேவலமாயிருக்கும் முழு இடமும்.  சமையலும் அதேபோல சில ஐயிட்டங்கள் செய்யவருமே தவிர என்னளவுக்கு ஆர்வமிருக்காது பாலனுக்கு. 

கோம்பைல இருந்தவரைக்கும் நான் செய்வதையெல்லாம் செய்து “தன்னாலும்” செய்யமுடியும் என்று என்கூட போட்டி போடுவதே என் தம்பிக்கு வேலை. மசால் அரைப்பான், அம்மியில். கொஞ்ச நேரத்திலேயே கடுப்பாயிடுவான். நான் எங்க வீட்டு ரோஜாச்செடிகளை cross செய்து ஒரே செடியில் பலகலர்-னு கலக்கிக்கிட்டு இருப்பேன். அவனும் செய்து பார்த்தான், வரவில்லை அவனுக்கு. அவனைமாதிரியே சைக்கிள் ஓட்ட எடுத்த என்னோட முயற்சி தோல்வியைத் தழுவியதையும் சொல்லவேண்டும் இங்கே. கோலிகுண்டு அடிக்க எனக்கு அவ்வளவா வராது. அடிப்பேன், ஆனா ஜெயிக்கமாட்டேன். அவன்தான் ஜெயிப்பான்.  பிள்ளாக்குட்டி, கோலிக்குண்டெல்லாம் ஒரு வரட்டுப் பிடிவாதத்துக்கு விளையாடியதே தவிர ராக்கடிப்பூவில் ராக்கடிசெய்து தலையில் வைத்துக்கொள்ளும்போது வந்த சந்தோசம், ரெண்டு கோலிக்குண்டை உடைத்ததிலோ, பிள்ளாக்குட்டியைத்தூக்கிப்போட்டு அடித்ததிலோ வந்ததில்லை.

பெண்கள் பிறக்கிறார்களா உருவாகிறார்களா-ன்னு கேட்கிறாங்க ஹிப் பாட்டி.

இன்னைக்கு இருக்கிற சமுதாயச் சூழ்நிலை இதற்கு ஒரு குழப்பமான பதிலையே தரும். ஆனால் என்னோட அனுபவத்தில், பெண்கள் பிறக்கிறார்கள். 

ஒரு கொசுறு: நேற்றுத்தான் 120மைல் காரோட்டிட்டு வந்தேன்.  அப்படியொரு தலைவலி. காரோட்டுவது தேவையென்றாலொழிய விரும்பி செய்யமாட்டேன்.