Archive for the ‘பெண்’ Category

பாலனின் செல்லமா?

செப்ரெம்பர் 25, 2007

பெண்குழந்தைன்னு சொல்லிட்டாங்க.  இன்னும் 17 வாரம் இருக்கு  தங்கமினி   (வார்த்தை  உபயம்:  ஜெயஸ்ரீ)  உலகக்  காற்றை  சுவாசிக்க.  இந்த உலகுக்கு வந்ததுக்கப்புறம் பாலனின் செல்லம்னு அப்பாவும் பொண்ணும் சேர்ந்துக்கிட்டு என்னை வெறுப்பேத்தப் போறாங்களா, இல்லை சின்னப் பிரேமலதாவா ஆகி பாலனுக்கு ஒரு தலைவலியா இருக்கப் போகுதா… பொறுத்திருந்துதான் பார்க்கணும். இப்போ நம்ம கடமை ஒரு பேர் தேர்வு செய்றது. 

 நல்லதா ஒரு பேர் சொல்லுங்க. வலை இணைப்புகள்லாம் பார்த்திருக்கிறேன். அதனால, இணைப்பெல்லாம் குடுக்கவேண்டாம் (கொடுத்தாலும் தப்பில்லை). உங்களுக்குப் பிடிச்ச பேரா சொல்லுங்க. கீழ்க்கண்ட என் வரையறைக்ளுக்குள் அடங்கினால் நலம்.

  1. நட்சத்திரம், ராசி, நியூமராலஜி போன்ற எதிலும் எனக்கு நம்பிக்கை கிடையாது. ஆகையால் இது எதும் இல்லாமல் பெயர் பிடித்திருந்தால், பிடித்த காரணத்தைச் சொல்லி பெயரைச்  சொல்லுங்கள்
  2. சின்னதாக வாய்க்குள் நுழையும்படியாக (வாழைப்பழம் அப்படியே முழுதாக வாய்க்குள் நுழையாது தெரியுமோ?), சுலபமாக ஆங்கிலத்தில் எழுத்துக்கூட்ட முடியும்படியாக இருக்கவேண்டும்
  3. பழசோ புதுசோ பரவாயில்லை.
  4. இந்தியப் பேராக இல்லாவிட்டாலும் பரவாயில்லை.
  5. இந்தியப் பெயர்தான் என்றால், தமிழாக இருந்தால் இன்னும் நலம். (4ம் 5ம் முரண்படுகின்றனவோ!) சமஸ்கிருதம் பரவாயில்லை, ஆனால் வெள்ளைக்காரனுக்கு முழி பிதுங்கும்படியாக இருக்கக் கூடாது. (“ஸ்ரீ” இருக்கும் பெயர்கள் பற்றி வெள்ளைக்காரனின் கருத்து: “nice name, if you can get your tongue around it”!!)
  6. தமிழாக இருந்தால் ழ இல்லாத பெயராக இருந்தால் நலம். (ஆங்கிலத்தில் zha என்று எழுதி  “ட்ஸா” என்று தமிழற்றோர் உச்சரிக்கும்போது நன்றாக இல்லை)
  7. சில பெயர்கள் சின்னக்குழந்தைகளுக்கு அழகாய் இருக்கும். அதே குழந்தை வயதான பிறகும் அதே பெயருடன் வாழவேண்டும் என்பதை மனதில் கொண்டு பரிந்துரைத்தால் நலம்.

நன்றி.