பாயாசமும் புது வருடப் பிறப்பும்

வருசப் பிறப்பன்னைக்கு பாயாசம் வைக்கணும்னே எனக்குத் தெரியாது. எங்க வீட்ல செய்ததில்லை. சிலர் இன்னைக்கு பாயாசம் செய்யணும்னு சொன்னதை வைச்சு, என்ன பெரிசா பாயாசம்தானே செய்துடலாம்னு ஆரம்பிச்சேன். எனக்கு பாயாசம்னா ஜவ்வரிசி சேமியா பாயாசம்தான். ஜவ்வரிசி இருக்கும்னு நம்பிக்கை இல்லாததால், வெறும் சேமியா போட்டு வைக்கலாம், ரெம்ப ஈஸி-ன்னு ஆரம்பிச்சேன். எதையோ தேடப் போய் ஜவ்வரிசியும் கிடைச்சது. சந்தோசமா ஆரம்பிச்சேன். தேவையான பொருட்களையெல்லாம் வைச்சு போட்டோவேற எடுத்துக்கிட்டேன். போட்டோ நல்லா வரல. பரவாயில்லை பாயாசம்தான் முக்கியம்னு ஜவ்வரிசியை வேகப் போட்டேன். ரெண்டே நிமிசத்துல சேமியாவைச் சேர்த்துட்டு சீக்கிரமா சேர்த்துட்டோமோன்னு கவலையோட பார்த்துக்கிட்டிருந்தேன். ஆனா சேமியா  வெந்துவர, எப்போதும்போல் குழையாமல் (காணாப் போகாமல்) ஜவ்வரிசி சரியான பதத்தில் வெந்திருந்தது. இன்னைக்கு எல்லாமே நல்லாப் போய்க்கிட்டிருந்தது. அளந்து வைச்சிருந்த சர்க்கரையில் பாதியைப் போட்டேன். கலந்து விட்டுட்டு எடுத்து சாப்பிட்டுப் பார்த்தேன். அட்டகாசமாயிருந்தது. மறுபடியும் போட்டோ எடுத்திக்கிட்டேன். இப்படி கலையுணர்வோட சமையல் போட்டோ-ன்னு நான் இருக்கும்போது எங்க வீட்டு நண்டு அரிசி டப்பாவைத் திறந்து டம்ளரில் மோந்து கீழ கொட்டி, வாயில் கொட்டின்னு விளையாடிக்கொண்டிருந்த குழப்பம் அப்புறம்தான் கண்ணில் பட்டது. போதாக் குறைக்கு  கப்போர்ட்களில் இருந்து இன்னும் நிறையப் பொருட்கள் என் காலடியில்  கொட்டி வைக்கப் பட்டிருந்தன! நண்டைத் தூக்கி வாயிலிருந்த அரிசியை தோண்டி எடுத்துவிட்டு வெளியில் கொண்டு விட்டுட்டு, மீதமிருக்கிற சீனியையும் போடலாம், என்ன பெரிசா இனிச்சிரப் போகுதுன்னு மீதமிருந்த சீனியையும் கொட்டிக் கிளறினேன்.

உவ்வே.. வாயில வைக்க முடியல! பால் ஊத்திக் காயவிட்டுப் பார்த்தேன். ம்ஹூம். கொஞ்சம் (கொஞ்சமா, எக்கச்சக்கமா) சுடுதண்ணி ஊத்தினேன். இன்னமும் இனிப்பு வாயில வைக்க முடியல! கடுப்பாகி ப்ளாக் அடிக்க வந்துட்டேன்.

புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

பின்னூட்டமொன்றை இடுக