Archive for the ‘பயணம்’ Category

பயணங்களில் – 1

பிப்ரவரி 21, 2007

இந்தமுறை சென்னை போனபோது அதிக வித்தியாசம் உணராததிற்கு ஒரே காரணம்,  போனமுறை வந்துபோனதிலிருந்து இடைவெளி ஒன்றரை வருடம்தான்  என்பது.  போனமுறை வந்தபோதுதான் எல்லாமே புதிது, இடைவெளியும் அதிகம்.  இந்தமுறை கண்டிப்பாக கோம்பை போகவேண்டும். இல்லையென்றால் சித்தி மனது வருத்தப் படுவார்கள். ஆனால் ஒருவாரப் பயணம் மிகவுமே கடினமாக இருக்கும். சிறிது நாட்களுக்கு முன்னரே செய்த மருத்துவமுறை வேறு இன்னும் நடக்கவிடாமல் வலி தந்து கொண்டிருந்தது. சாந்தாவைப் பார்க்கவேண்டும், சுஹாசினியைப் பார்க்கவேண்டும். சுஹாசினி எந்த அளவுக்கு பார்க்கமுடியும் என்பது அவர்களது வசதியைப் பொறுத்தது. பார்க்காமல் போனால் நன்றாக் இருக்காது.  ஐகாரஸ் பிரகாசைப் பார்க்கணும்.  வலைப்பதிவுல போட்ட என் புகைப்படம் என்னை கொஞ்சம் அதிகமாகவே அழகாகக் காட்டிவிட நேர்ல அசிங்கமா இருக்காங்கன்னு பதிவு போட்டிருவாரோன்னு ஒரே டென்சன். பாலனும் செந்திலும் வேறு ப்ளாக்கர் மீட் (ஒரே ஒரு ஆளத்தான் பார்க்கப் போறதுன்னாலும்) என்றாலே புகைந்து கொண்டிருந்ததோடு மட்டுமல்லாமல் அப்படியொரு ப்ரோக்ராமுக்கு பயங்கர எதிர்ப்புத்தெரிவித்துக் கொண்டிருந்தார்கள். 27ஆம் தேதி சாயந்தரம் சென்னை வந்திறங்கினோம். 28ஆம் தேதி புதுமனை புகுவிழா. 28 சாயந்தரம் சுஹாசினியைச் சந்திப்பதாக  ஒரு  திட்டம்.  அவங்க வெளியூர்ல இருக்காங்கன்னு சேதி வந்த உடனே ப்ளாக்கர் மீட்டுக்கு அடிப்போட்டேன். ஆனால்  செந்திலும்  பாலனும்  செய்த  சதியால்  எதுவும்  நடக்கவில்லை.  29ஆம் தேதி காலை கோயம்புத்தூருக்குப் பயணம்.  ஏர் டெக்கான் ப்ளைட் விட்டானோ இல்லையோ 9மணிக்கு சுலபமாக கோயம்புத்தூரில் இருந்தோம்.

சாந்தா ஏர்போர்ட்டுக்குள்ளயே வந்திருந்தார்கள்.  அலங்கார் ஹோட்டலுக்கு காலை உணவுக்காக போகும் போது லக்ஷ்மி காம்ப்ளக்ஸ் கண்ணில் பட எனக்கு ஏகத்துக்கு ஞாபகங்கள் வந்தன. முக்கியமாய் ஒருமணிநேர போட்டோ கார்னர் (சரியாக என்ன பெயர் என்று மறந்துவிட்டது). நானும் அரவிந்தனும் பாலனும் அங்கயே நின்னு கதை பேசிக்கொண்டிருந்துவிட்டு புகைப்படங்களை வாங்கி அங்கயே பார்த்து எல்லோரயும் (“எங்ககூட போட்டல் இருக்கிற) கிண்டல் செய்து, சில கருப்புப் படங்களோடும் (எக்ஸ்போஷர் பத்தலடா) வந்த நாட்கள் அப்படியே ஒரு வினாடியில் மின்னலடித்து மறைந்தது. 1991-ல் கோயம்புத்தூரை விட்டுப் போனது, இப்போத்தான் திரும்ப வந்திருக்கிறேன். “போகணுமா காலேஜ் பக்கம்” என்று சாந்தா கேட்க, வேண்டாமென்று மறுத்துவிட்டேன். நேரமின்மையும் ஒருகாரணம்.

கோவை மருத்துவ மையத்தில் மருத்துவரம்மா ஒருவரைப் பார்க்கச்சென்றோம். சாந்தாவின் ஏற்பாடுதான்.  சற்று கலந்தாலோசித்துவிட்டு வரலாம் என்றுதான் சென்றோம், சில பரிசோதனைகளையும் செய்து விட்டார்கள். சந்தாவின் உறவினர்தான் மருத்துவர்.

சாந்தாவின் வீட்டைச் சென்றடையும்பொழுது மணி 2. அருமையான சாப்பாடு. அதிகம் சாப்பிட்டதால் புகைப்படங்களில் இன்னும் பெரிய வயிறுடன் இருந்தேன். 4 மணிக்கு விடைபெற்றுக் கிளம்பினோம், கோம்பை நோக்கி.