Archive for the ‘காதல் கதை’ Category

ஒரு காதல் கதை

மே 3, 2007

Who is your lobster?னு மேட்மம்மா கேட்கிறாங்க. 

Who is your soulmate?னு நிறைய படங்கள்ல வரும்.

எனக்கு soulmateல நம்பிக்கை கிடையாது. ஆனா அந்த ஐடியா பிடிக்கும். Serendipityங்கிற படம் அதனாலயே ரொம்ப பிடிச்சிருந்தது.

என்னோட ட்ரங்க்கு பெட்டிக்குள்ல பத்திரமா பாதுகாக்கப் பட்டிருந்த அந்த ஒரு ரூபாய் நோட்டு… இரு  பக்கங்களிலும்  கையெழுத்திடப்  பட்டு   …….
onerupee_frontonerupee_back

“with lots of love” ங்கிற வார்த்தைகள் பெரிசா ஒண்ணும் பண்ணல. “Preamlatha”ன்னு என்பேரை எழுதியிருந்ததுதான் கொஞ்சம் கலங்கடிச்சிடுச்சு.  1.1.89 பார்த்தவுடனே லேசா புன்னகை வந்தது..

DSCN4145

 (ஜனவரி, 2007, கோம்பை). பெட்டியத் திறக்கலாம்னு உட்கார்ந்த உடனே, எனக்கிருந்த உற்சாகமும் ஆர்வமும் அங்கிருந்த எல்லோரையும் தொத்திக்கிச்சு, வெவ்வேற அளவில வெவ்வேற காரணத்துக்காக. ரங்கமணிக்கு ஆர்வம் இருந்தது, ஆனா என் தம்பிக்குத்தான் ரெம்பவே ஆர்வமும் உற்சாகமும்,  எனக்கிருந்தமாதிரியே. என்னயிருந்தாலும் அந்தப் பெட்டிக்குள்ல இருந்தது எல்லாம் அவனோட லெட்டர்கள், அவன் எழுதினது.

பெட்டிக்குள்ல சில பழைய பர்ஸ்களும் இருந்தன. இதையெல்லாம் ஏன் தூக்கிப்போடாம பத்திரமா வைச்சிருந்தேன்னு இதுவரைக்கும் தெரியாது எனக்கு. ஒரு பர்ஸ்க்குள்ல ஒரு ஒரு ரூபாய் நோட்டு இருந்தது. லேசா சிரிப்பு வந்தது எனக்கு. வெளில எடுத்தேன். “செல்லும் செல்லும் செல்லும்”னு எல்லாப் பக்கங்களிலிருந்து கமெண்ட் வந்தது (தம்பி, ரங்கமணி, தம்பி மனைவி தவிர). அந்த ரூபா நோட்டுல கொஞ்சம் எழுதி, ரெண்டுபக்கமும் ஏதோ எழுதி கையெழுத்தெல்லாம் இருந்ததப் பார்க்கவும் எனக்கு ஆச்சரியமாயிருந்தது.  “ரூபா நோட்டுல வெத்து இடம் விட்டு அச்சடிக்கிறவனச் சொல்லணும். அவய்ங்களாலதான்  சில குடும்பமே கெடுது”ன்னு என் குடும்பம் எனக்காக கவலைப் பட ஆரம்பிச்சிடுச்சு, ஏன்னா ரங்கமணி பார்த்துட்டாராம். அந்த கமெண்ட்ட அப்படியே புறங்கையால தள்ளிட்டு, வேறொரு தருணத்துல முழுசா அனுபவிச்சு சிரிச்சுக்கலாம்னு அப்படியே தள்ளிட்டு, நோட்டைக் கவனிச்சேன். டக்குனு தம்பிக்கு அக்கறை வந்துருச்சு, “வேற இடத்துக்கு பெட்டிய தூக்கிக்கிட்டுப் போ, தனியா உட்கார்ந்து பாரு”ன்னு சொன்னான்.  நான், ரங்கமணி, தம்பி, தம்பி மனைவின்னு “தனியா” உட்கார்ந்து பெட்டியை ஆராய ஆரம்பிச்சோம்.

பேரு Arul மாதிரி தெரிஞ்சது. ஆனா சில்லியா ரூபா நோட்டுல கையெழுத்துப் போட்டுக்கொடுக்கிறமாதிரி அருள்னு யாரும் எனக்கு ஞாபகத்துக்கு வரல. இந்தமாதிரி ஒரு விசயத்துல நானும் கலந்திருக்கேன்ங்கிறதையே என்னால நம்பமுடியல.  ஒருபக்கம் “With Lots of love    Arul”னும் மற்ற பக்கம் “PreamLatha   1.1.89″னும் இருந்துச்சு.  ஏதாவது விளையாட்டுத்தனமா கிண்டல் பண்ணியிருக்கலாம் அல்லது எதாவது நானும் இந்த அருளும் பெட் கட்டியிருக்கலாம்னு தோணுச்சு எனக்கு. இப்பவும், அப்படித்தான் நினைக்கிறேன். ரூபா நோட்டுல கையெழுத்துப்போட்டெல்லாம் என்னைய யாரும் வாங்கிக்க வைச்சிருக்க முடியாது, அதுலயும் “Lots of love”னெல்லாம் போட்டு!!  சிரிச்சு கேவலப் படுத்தியிருப்பேன் அப்பவே. ஆனா அப்படியொரு நோட்டு என்கிட்டயிருந்தது, என்னால பத்திரமா பாதுகாக்கப் பட்டு வைக்கப்பட்டிருந்த உண்மையும் எனக்கு ஒரு ஆர்வத்தைக் கொடுத்தது.

அப்போத்தான் அந்த spellingஐப் பார்த்தேன். PreAmlathaன்னு கரெக்ட்டா தப்பாயிருந்துச்சு. இந்த உலகத்திலேயே ஒரே ஒருத்தர்தான் என் பேரை அந்தமாதிரி எழுதினது (அது ரங்கமணியல்ல). அவர்கிட்டயிருந்து வந்த கடிதங்களும் பெட்டிக்குள்ல இருந்தமையால், கையெழுத்தை ஒப்பிட்டுப்பார்த்தேன்.  அவரோட (அவனோட-ன்னுதான் கூப்பிட்டுப் பழக்கம். போகட்டும் வலைப்பதிவில மரியாதையா எழுதுவோம்), கையெழுத்து எனக்கு மறக்கவெல்லாம் இல்லை. ரெம்ப நேர்த்தியா அச்சடிச்சமாதிரி இருக்கும். ஆனாலும் கடிதங்களை எடுத்து ரூபா நோட்டுக்கூட ஒப்பிட்டுப் பார்த்தேன். ம்ஹீம் ஒத்து வரல. ரூபா நோட்டுலவேற Arulங்கிற பேரு தெளிவாவே இருந்துச்சு. என்னைப் Preamனு கூப்பிடறவரோட பேரு வேற.

1988-1989 காலேஜ்ல படிச்சுக்கிட்டிருந்த காலம். அப்படின்னா என்னோட வகுப்புல ஒருத்தனாத்தான் இருக்கணும். ஏன்னா என்  வகுப்பு  பையன்கள்  தவிர  வேற  யாரு கூடயும் பழகவில்லை நான், ஒரே ஒருத்தரைத் தவிர.   என் வகுப்பில் ஒரே ஒருத்தனோட பெயர்தான் “அருள்”னு  ஆரம்பிச்சது….    அப்போ,  “அருள்மொழியாத்தான் இருக்கணும்’னு நான் சொன்னவுடனே என் தம்பி ரெம்பவே வருத்தப் பட்டான். ஏன்னா அருள்மொழி இப்போ உயிரோட இல்லை. அவனது பிஸினஸ் பார்ட்னரால் கொல்லப் பட்டு இறந்திருந்தான். அவன் இறந்து சில வருடங்கள் கழித்துதான் எனக்கு தெரிய வந்தது.  அவனுக்குத் திருமணமாயிருக்கவில்லை. 

 அருள்மொழியும் நானும் நிறைய வாதாடுவோம், மணிக்கனக்கா. என்னை சீண்டிவிட்டு வேடிக்கை பார்ப்பது அவனுக்கு வழக்கம். என்னை கோபமூட்டி,  நான்  வேகத்தோட   சண்டை  போடறதை  ரசிப்பான்.  அவனுக்கும் எனக்கும் “கனிவான/மென்மையான” எந்த உறவும் இருந்ததில்லை.

என்பெயரை எழுதியிருந்த விதம்தான் என்னை யோசிக்க வைச்சுது. Preamனா (Priyamங்கிறமாதிரி) “பிரியமானவள்”னு அர்த்தமில்லையா…. Premனாக்கூட “Love”னுதான் அர்த்தம், ஆனா எங்க யாருக்கும் அப்போ சமஸ்கிருதமெல்லாம் தெரியாததால “Prem”க்கு பெரிசா மரியாதை கொடுத்ததில்லை. ப்ரேமம்-னா புரிஞ்சிருக்கும், ப்ரேம் அவ்வளவாப் பெரிசாப் படல எங்களுக்கு.  அந்த மாதிரி சரியா, தப்பா Preamலதா-ன்னு எழுதுறதப் பத்தி எனக்கு விளக்கிட்டு என்னை அந்தப்பேர்ல  கூப்பிடுவார்  அந்த  இன்னொருத்தர்.  ஆனா அருளும் இப்படி என் பேரை எழுதினான்னு எனக்குத் தெரியாது. இந்த ரூபா நோட்டு கையெழுத்துச் சமாச்சாரத்தில மட்டும்தான் அனேகமா இப்படி எழுதியிருப்பான். நானும் கவனிக்காம அப்படியே வாங்கி பர்ஸில பாக்காமக்கூட வைச்சிருப்பேன். அப்படித்தான் நினைக்கிறேன்.  இந்தமாதிரி ஒரு கையெழுத்து விவகாரம் எனக்கு ஞாபகமேயில்லை.  அந்த புதுவருட நாளில் நடந்ததா எந்த விசயமும் எனக்கு ஞாபகமில்லை.  கல்லூரி வாழ்க்கையில ஆட்டம் போட்டதெல்லாம் ஏதோ கலங்கலா ஞாபகமிருக்கு, ஆனா குறிப்பிட்டு சொல்றமாதிரி எந்த நிகழ்ச்சியும், 89ஓ இல்ல எந்தப் புதுவருட இரவோ ஞாபகத்தில இல்லை. புதுவருட இரவாத்தான் இருக்கணும், ஏன்னா பசங்களோட வெளில போறதொன்னும் செய்யாத விசயமில்லை, அதிலயும் புதுவருட இரவு 12மணிக்கு ஆடறதுன்னா விட்டிருக்க மாட்டேன். பெண்கள் விடுதிதான், கட்டுப்பாடெல்லாம் இருந்துச்சுதான்.. யாரு கண்டுக்கிட்டா!!

 வேறொரு பொண்ணுகிட்ட அவனுக்கு விருப்பமிருந்ததா கதைகள் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனா எல்லாப் பொண்ணுகளுக்கும், எல்லா பையன்களுக்கும் எதாவது ஒரு கதை யாரையாவது வைச்சு இருந்துச்சுதான்.. எந்த காம்பினேசனைத்தான் விட்டு வைச்சிருந்தாங்க!   ஹீம்ம்ம்ம்…  அருளுக்கு என்மேல விருப்பமிருந்திருக்கும்னு என்னால நினைச்சும் பார்க்க முடியல. இப்பவும் இந்தக் கையெழுத்து அவனோடதுதான்கிறதிலயோ, அவனுக்கு  என்மேல  விருப்பமிருந்துச்சு-ங்கிறதிலயோ   எனக்கு  முழு  நம்பிக்கையில்லை.

இனிமே தெரிஞ்சுக்கவே முடியாதுங்கிறது வருத்தமாத்தான் இருக்கு. 

யாரு இந்த அருளோ,… இந்த  கையெழுத்து  மேட்டர்  சும்மா விளையாட்டோ,   பெட்  கட்டினதோ,  இல்ல நிசமாவே ஏதோ சொல்ல முயன்றதோ …..  எனக்குத் தெரியல.  என்னை உன்னோட Lobster அல்லது soul-mateஆ நினனச்சியிருந்தா, மன்னிக்கவும் நான் உன்னை அப்படி நினைக்கவில்லை. எனக்கு lobster அல்லது soul-mate யாருமில்லை  ஏன்னா எனக்கு அதிலெல்லாம்  நம்பிக்கையில்லை.  எனக்குன்னு பாதுகாப்பான ஓரிடம்,  எனக்குன்னு இதமான ஓரிடம் இருக்கு எனக்கு.  என்னோட ரங்கமணி.  சிலவருட வாழ்க்கையில வந்த உணர்வு அது.  பழகிடுச்சு கூடவே இருந்து…  இதுதான் Lobsterனா, இதுதான் என்னோட lobster.