Archive for the ‘புலம்பல்’ Category

கல்லைக்கண்டா நாயக் காணோம்

செப்ரெம்பர் 7, 2007
  1. போளி செய்யபோறேன், ஜெயஸ்ரீகிட்ட ரெசிப்பி வாங்கித்தான்னு கேட்டு (பாலன், நானில்லை. எனக்கெதுக்கு இந்த  விஷப்  பரீட்சை யெல்லாம்)  ரெண்டுவாரமாகுது. நானும் ரெசிப்பி வாங்கிட்டு, வீட்ல இருக்கிற சாமான்லாம் செக் பண்ணிட்டு, வெல்லம் இல்லை வரும்போது வாங்கிட்டு வான்னு சொல்லியாச்சு. இன்னும் வெல்லம் வந்து சேர்ந்தபாடில்லை.
  2. எங்க ஊர் விவசாயிகள் சந்தையில் வாழைப்பழம் ஒரு பெட்டி ஒரு பவுண்டுக்கு வாங்கினோம். (சில சமயம் குறைச்சுக் குடுடா, பாதிப் பெட்டி வாங்கிக்கிறேன், 50 பென்ஸ் போட்டுக்கோன்னாலும் தர மாட்டான்). சரி வாழைப் பழ கேக் பண்ணலாம் என்று பார்த்தால் முட்டை இல்லை. முட்டை வாங்கிட்டு வா-ன்னு சொல்லி ரெண்டு நாள் கழிச்சு முட்டை வந்துச்சு. திரும்பிப் பார்த்தா வாழைப் பழத்தைக் காணவில்லை. தின்று தீர்க்கப் பட்டிருந்தது (நான் ஒத்தே ஒத்தப் பழம்தான் தின்னேன்).
  3. வாழைப்பழம் பெட்டி நிறைய பார்த்தப்போ, கேக் செய்தாலும் தீராது, கொஞ்சம் சிய்யாப்பம் செய்வோம்னு பார்த்தா எண்ணெய் இல்லை. எண்ணெய் வாங்கிவரப் பட்டது. வாழைப் பழம் தீர்ந்துபோய் விட்டது (பாயிண்ட் 2ஐப் பார்க்கவும்).
  4. மேத்தி கீரை (வெந்தயக் கீரை) வாங்கி வைக்கப் பட்டிருக்கிறது. இருவருக்கும் பிடித்த கீரைதான். ஆனால், வெந்தயக் கீரை அகத்திக் கீரைபோல் லேசாகக் கசக்கும் என்பதால் நிலக்கடலை வறுத்துப் பொடித்துப் போட்டு செய்வேன். தேங்காய்த்துருவெலெல்லாம் கூட இந்தக் கசப்பை எடுக்க முடியாது. நிலக் கடலை எடுத்துவிடும். நிலக்கடலை சாப்பிட வேண்டாம் என்று எனக்கு டாக்டர் சொல்லியிருக்கிறார் (குழந்தைக்கு ஆகாதாம்).  ஏற்கனவே இருமுறை இதேபோல் வாங்கி வந்து தேங்காய்த்துருவல் போட்டு செய்து பார்த்து நன்றாக இல்லாமல் ஒருமுறையும், பாலனுக்கு மட்டும் தனியாக நிலக்கடலை போட்டு செய்துவிட்டு இருக்கிறதே ரெண்டுபேர், இதுல தனித்தனியா எப்படி செய்யமுடியும் என்று திட்டி ஒருமுறையும் நடந்து முடிந்திருக்க, இப்போ மறுபடியும் வெந்தயக் கீரை. கீரையை பார்த்ததும் ஒரு ரீகேப் கொடுத்தேன். மண்டையில் ஏறவில்லை. அதோடு கீரையை ஆய்வதற்கு ஒரு இரண்டுமணி நேரமாவது தேவைப் படும். இந்த லட்சணத்தில் மூன்றுகட்டு கீரை வந்திருக்கிறது! கீரை வீட்டுக்கு வந்து இரண்டாவது நாளே புலம்பியாச்சு, கீரை வாடி வீணாப் போகுது இனிமே நான் ஜென்மத்துக்கும் கீரைவாங்க மாட்டேன்னு.
  5. இன்னும் ரெண்டுநாள் கழித்து, முட்டை அப்படியே இருக்கிறது, இனிமே நீ என்ன கேட்டாலும் வாங்கிக் கொண்டு வரமாட்டேன் என்ற ஸ்டேட்மெண்ட் வரும். (update: இரண்டு நாட்கள்   காத்திருக்க வேண்டியிருக்கவில்லை. இந்த போஸ்ட் போட்டது வெள்ளி மாலை. ஸ்டேட்மெண்ட் சனிக்கிழமை காலையிலேயே கிடைத்துவிட்டது!)
  6. ஜெயஸ்ரீயின் முள்ளு முறுக்கு படம் பார்த்துவிட்டு நானும் செய்யலாம் என்று பார்த்தால் அரிசி மாவு கொஞ்சம்தான் இருந்தது. (அரிசிய ஊறவைச்சு அரைக்கிறாங்களா? யாரவங்க? சல்லடையா? அந்த மியூசியத்துல இருக்குமே அதான?!)  இருக்கிறவரைக்கும் செய்யலாம்னு பருப்பெல்லாம் வறுத்து அரைச்சுட்டுப் பார்த்தா எண்ணெய்  ரெம்பவே கொஞ்சமாக இருந்தது. தோல்வியை ஒத்துக் கொள்ள மாட்டேன் என்று,  இருக்கிற எண்ணெயைக்  காயவைத்து முறுக்கு புழிந்த்தால் முதல் பேட்ச் கறுகி விட்டது.  மொத்தமே  ரெண்டு  உழக்கு  மாவுதான். மீதி இருந்த மாவு  கறுகவில்லை யென்றாலும் டேஸ்ட்டாக இல்லை. அப்படியே  பையை எடுத்துக் கொண்டு கடைக்குப் போய் சைனீஸ் டேக்கவே-யில் எனக்கு மிக்ஸ்டு வெஜிடபிள் சௌமின்-னும் (சூப்பரா இருக்கும். எனக்கு  ரெம்பப் பிடிக்கும்) பாலனுக்கு சிக்கன் (and green pepper in black bean and garlic sauce)உம் வாங்கிக் கொண்டு வந்து வைத்துவிட்டு, “சப்பாத்தி மாவு மீதி இருக்கு சப்பாத்தி போட்டுக்க; ஃப்ரிட்ஜில் நேத்து (நேத்தா, முந்தாநேத்தா?) செய்த கோபிமட்டர் இருக்கிறது எடுத்துக்க. பத்தாட்டி  தக்காளி ஊறுகாய் வைச்சுக்க. இந்த சிக்கன் வாங்கிட்டு வந்திருக்கேன். இதையும் சப்பாத்திக்குத் தொட்டுக்கலாம். இல்லை, உனக்கும்  சௌமின் வேணும்னா சொல்லு வாங்கிட்டு வாரேன்”னு சொல்லிட்டு கடையைக் கட்டிட்டேன் 😦