Stockholm syndromeஉம் தமிழ்க்கலாச்சாரமும் – 5

முன்குறிப்பு: கண்டிப்பாய் படித்துவிட்டு வரவும்:  Stockholm syndromeஉம் தமிழ்க்கலாச்சாரமும்-4

மற்ற முந்தைய மூன்று பதிவுகளும்:

முதல் பதிவு         இரண்டாம் பதிவு          மூன்றாம் பதிவு

*******இப்பொழுது பதிவு:***********

 

“என்ன கொண்டுவந்தாய்?”

“வடிவான இடுப்பும் வளமான முலைகளும். தேடிப் பிடித்தேனாக்கும்”. பெருமை முகத்தில்.

“முதற்சில நாட்கள் தாங்கும். உன் அம்மாவின் சோறும் இருட்டுவீட்டில் உணவும், நீ வீடு திரும்பும் நேரங்களில் வாகாய் இருக்கும், வடிவான இடுப்பும் வளமான முலைகளும், இருண்ட அவள் அறையும். என்ன செய்வாய் வெளிச்சத்திற்கு வந்தபின்?”

“கருப்பொன்றுமில்லை, கண்குருடோ காதுசெவிடோயில்லை. விரல்கள் பத்தும் சேமம். கையும் காலும் நீளங்கள் சரியே. வெளிச்சத்திற்கு கொண்டுவருவதில் பயமேதுமில்லை.”

“வாய்திறந்து கேட்டாயோ மூடா?”

“குரலில் பாங்கில்லை, கதறும்போது கவனிக்கத்தான் செய்தேன். “

“நம் மொழி பேசுவாளா கவனித்தாயா? வாய்பேசாத வாசுகி, இறைக்கும் வாளி நிறுத்த நில் என்று சொல்லுமட்டும் வள்ளுவரும் மகிழ்ந்து போய்தான்  இருந்தார், அழைப்பு கேட்டு வந்தாளல்லவா உடனே. ஆனால், தெரியுமா சேதி, அவரே பின்னர் கேளாதே கேளாதே பெண்பேச்சுக் கேளாதே என்று கதறினாராக்கும், நில் என்று சொன்ன வாய் அத்தோடு நிற்காமல் மற்றதும் பேசப்போய் வள்ளுவரும் கதறவேண்டியதாயிற்று தெரியுமோ சேதி?”

“என்ன சொல்லவருகிறாய்? ஒன்றும் புரியவில்லை, உன் உளறலும் தெளிவாயில்லை. இனம் பெருக்க பெண்வேண்டும், எதிரிகூட்டத்தவளாயிருக்கவேண்டும்.  பிள்ளைகள் பெற தகுதியிருக்க வேண்டுமென்றுதானே அய்யனும் சொன்னார்.  பேசினால் பிள்ளை பிறக்காதா? விளங்கும்படிதான் பேசேன். என் சிற்றறிவுக்கு எட்டும்படி தான் எடுத்தியம்பேன் என் மூத்தோனே. “

“மூடா, கேள். மெல்லச் சொல்லுவேன் படிப்படியாக. எங்கு பிடித்தாய் சொல் முதலில்”.

“காட்டில் ஒரு ஆற்றங்கரையில், ஒரு பழமரத்தடியில், ஏதே தேடுவதுபோன்ற பார்வையுடன், மான்களும் மயிலும் பக்கத்தில் பழக்கமாய் இருக்க, பூத்தொடுத்துக்கொண்டிருந்தாள் என் தேவதை.”

“மோசம்போனாயா மூடா, வீடுவிட்டு காடு வந்தவள் வெளிச்சம் தெரிந்தவளாயிற்றே, தாய்பேச்சு மறுத்து தனியே வந்தவளாயிற்றே. மான்களும் மயிலும் பழகிப்போகும்படி மொழிகள் தாண்டி எல்லாம் பேசுவாள் போலிருக்கிறதே. மோசம் போனாயே மூடா. உனக்கோ நான்பேசுவது புரியவே அரிதாயிருக்கிறது. தோழனின் வாழ்க்கை பார்த்தும் பழகவில்லயா நீ. காடுதேடி திரும்பிப்போனாளே  உன்தோழனின் தேவதை, என்ன புரிந்தது உனக்கு?. பேசினாள்தாள் முதலில், முத்து குலுங்கினாற்போல். உன் தோழனுக்கும் பெருமைதான். பேசினாள் தான் பின்னரும், நம் மொழியையும் பிள்ளை கொஞ்சினாற்போல். கிள்ளைமொழிக்காரியென்று ஊரே புகழ்ந்ததே  மறந்தாயே சிறுஞாபகக்காரா. பேசிக்கொண்டிருந்ததை நிறுத்திவிட்டு சிரிக்கவும் மறுத்து காடுதேடிப் போனாளே அவள், அதையும் மறந்தாயோ? என்ன புரிந்தது உனக்கு?”

“பார்த்தேனே பார்த்தேனே தோழனின் பெண்ணை. என் தேவதைக்குப் பின்னால் ஒரு புதரில் விழுந்து கிடந்தாளே. எந்தேவதையைக் கொள்ளும்போது சிரிக்கவும் செய்தாளே மெல்ல, ஒருபுறமாக, லேசாக இழுப்பது போன்று. என் தேவதையும் பார்த்தாள் அவளை, தவறாமல் திரும்பி. ஏனென்றும் புரியவைல்லை. முலைகள் மறைத்ததில் வேறொன்றும் தெரியவில்லை”.

“கெட்டாயே மூடா. இன்னும் கெட்டாயே.  அந்தப் பெண்ணின் தோழிதானோ இவள், இன்னும் கெட்டாயே மூடா. தாய்பேச்சு மறுத்து காடுவந்தவர்கள் இப்பெண்கள். தந்தைகளும் தமையன்களும் கூடப் பேசித்திரிந்தவர்கள் இப்பெண்கள். காடுகளும் தெரியும் கல நெல்லும் தெரியும் இவர்களுக்கு. கேள்விகளுக் கேட்பார்கள், சமைக்கும் நேரம்போக யோசிக்கவும் செய்வார்கள்.”

“பாங்கென்ன மூத்தோனே, பிள்ளைபெறுவாள்தானே தவறாமல். நேற்று இருட்டு அறையில் நீ சொன்னதும் செய்தேனே. கண்டிப்பாய் பிள்ளை பெறுவாள்தானே மூத்தோனே. “

வருத்தமாயிருந்தமுத்தோனுக்கு அவன் கவலையற்று வேறேதும் புரிவதாய்த்  தெரியவில்லை.  மூடனென்ற பேரோ எனக்காய்விட்டது.  மூத்தோனை மறுக்கவும்தான் இயலுமா  என்னால்? அடியும் கடியும் குத்தலும் குதறலும் கதறலுக்கு செவிடும் கட்டிப்போட்டு இருட்டும் சொல்லிக் கொடுத்தான்தானே.  மூத்தோனை மறுக்கவும்தான் இயலுமா எனக்கு?

“இன்னும் ஒன்றும் பாகுபட்டில்லை. பூதானே தொடுத்தாள், பழமரம்தானே விரும்பினாள்… ஒன்றும் பாகில்லை இன்னும். சென்று சொல், அவளுக்கு சிறுமூளையென்று”.

“நான் சொன்னால் போதுமா. அத்தனை நம்பிக்கையா என்மேல் அவளுக்கு?”

“மூடா மூடா முழுமூடா, அவள் நம்பவா நாம் சொல்கிறோம். நாம் நம்ப. நமக்கிருக்கும் பயம் அகற்ற”.

“என்ன பயம் உனக்கு? எனக்கேதும் பயமில்லை. ஆம், அவள் என்மேல் விருப்பம் காட்டவில்லைதான். கதறலில் ஏதும் மகிழ்ச்சி தென்படவில்லைதான். பூவாய் லகுவாய் வந்த உடம்பில் அத்தனை காயம் பார்த்து எனக்கே சிறிது வருத்தம்தான். அவளும்தான் என்ன செய்வாள்? பயமா, அவளிடமா, எதற்கு?  காயம்பட்ட உடம்புக்காரி என்ன செய்துவிடமுடியும்? வேலெறிவாளா அம்பு வீசுவாளா? கட்டிபோட்ட கயிறும் ஓங்கி அடித்த கழியும் தாக்கமானவைதானே. என்ன பயம் உனக்கு? இன்னும் அடிக்கவா சொல், மறுக்காமல் செய்வேன். மற்ற உன் உளறல் எனக்கு விளங்கவும் இல்லை அவளிடம் எனக்குப் பயமும் இல்லை. புரியும்படி பேசுவது உனக்கு மற்ந்துபோய்விட்டதா, இல்லை பூதம்தான் கண்டுவந்தாயா? அவளிடம் என்ன பயம் உனக்கு? “

“நம் கூட்டமே பயப்படுகிறது இந்தப் பேச்சுக்கார பெண்களைப் பார்த்து. இதற்குமேல் தெரியாது எனக்கு, சொல்லவும் முடியாது என்னால். நேற்று கூட்டத்தில் நாட்டாமையும் சொன்னார் பயம்தேவையில்லை, அவர்களுக்கு  சிறுமூளைதான் என்று. நாலுமுறை உரக்கச்சொன்னால் தெளிவாய் உண்மையாய் தெரிந்தது. மற்றபடி வேறு ஏதும் எனக்கும் தெரியாது. மறுபடியும் சொல்லிக்கொள் அவர்களுக்குச் சிறுமூளைதான் என்று. பூக்களும் பழங்களும் மட்டும்தான் மயிலும் மானும் மட்டும்தான் என்று உரக்கச்சொல், உன்னவள் அருகில் சென்று. நாம் சிங்கம் வென்றும் புலி வென்றும் வருவோம் அதற்குப் பெருமூளை வேண்டுமென்று உரக்கச்சென்றுசொல்”.

“வேலல்லவா வேண்டும் பெரிதாக, சிங்கமும் புலியும் கொல்ல? வெலென்று மூளையானது?”

“மூடா மூடா, கேள்விகேட்காதே. கேள்விகள்தாம் நம் எதிரியே. நன்றாய் தெரிந்துகொள், நீயும் கேட்காதே, அவளையும்  கேட்கவிடாதே.  நீயும்  யோசிக்காதே,  அவளையும்  யோசிக்கவிடாதே.  உரக்கச்சென்றுசொல் அவர்களுக்கு சிறுமூளையென்று.  தராக மந்திரமாய் ஞாபகத்தில் கொள். யோசனையோ கேள்வியோ வந்தால் கண்ணை மூடிக்கொள். உலகம் இருண்டுகிடக்கும் அப்போது. இருட்டுதான்  நம்  துணை  தெரிந்துகொள்.  மானும் மயிலும் உனக்கு, சிங்கமும் புலியும் எனக்கு என்று கண்டிப்பாக திட்டவட்டமாக்ச் சொல்லிவிடு. மானும் மயிலும் பழகச்சொல். கொல்லுவது நம் உரிமை, சொல்லிவிடு அவளிடம். வேலோ அம்போ கண்ணிலும் காட்டாதே. முன்னமே தெரியுமென்றால், மழுங்கச்செய்துவிடு.  சிங்கமும் புலியும் கொல்ல எங்கள் பெரூமூளை வேண்டுமென்று மறக்காமல் சொல் அவளிடம் சற்றே உரத்து”.

அவள் யோசனையை நான் எப்படித்தடுக்க முடியும்? அவள்  யோசிக்கவில்லை   என்று  நான்  சொல்லிக்கொள்ள  என்ன  நடந்துவிடும்?   மூத்தோன்  பேச்சை  மறுக்காதேயென்று  அய்யனும்  சொன்னார்,  அம்மையும்  சொன்னார்.  மூத்தோன்  சொன்னால்  சரியே.  எனக்கு  நானே  தராக  மந்திரம்  உரக்க  சொல்லச்  சொன்னான்.  சொல்லிக்கொண்டு  கண்களை  மூடி  உலகத்தை  இருளச்செய்யச் சொன்னான். அப்படியே  ஆகட்டும்.  ஆனாலும்…  

குழம்பிய மனதுடன் திரிந்தபோது நொச்சி மரம் கண்டேன். தலைவலியென்று சொன்னாளே. நொச்சி பறித்தேன். முதல் முறுவல் பார்த்தேன் அவள் முகத்தில் அன்று. பூமுள் குத்தப் பதறியும் போனேன் மற்றொருநாள்.  

கூரையொலொன்றும் குலுக்கையிலொன்றுமாய் காய்ந்த நொச்சி காத்துவைத்திருக்கக்  கண்டெடுத்தேன்.  

**********

சில இணைப்புகள்:

Stockholm syndrome

Lima Syndrome

PostScript: This is post was influenced by some happenings in the Tamil blogworld. It will be rewritten and toned down in order to make it worthy enough to be archived along with other posts in the stockholm syndrome series.

Advertisements

4 பதில்கள் to “Stockholm syndromeஉம் தமிழ்க்கலாச்சாரமும் – 5”

 1. dharanan Says:

  nenjam ganakkirathu padithu mudithvudan.verenna solla thozhi?

 2. seetha Says:

  குரலில் பாங்கில்லை, கதறும்போது கவனிக்கத்தான் செய்தேன்.

  இந்த ஒரு வரி போதும்.sums up everything.

  long ago, as a young intern witnessed a vaginal tear and heavy bleeding ( after firstnite )
  of a young woman in the gynaec opd who was apparenlty married to an old man.

  obsetrics and gynaec opd…. அடிக்கடி வீட்டுக்குப்போய் அழுத நாட்கள் அவை

 3. பத்மா அர்விந்த் Says:

  பிரேமலதா

  படிக்க படிக்க திரும்பவும் படிக்க தோன்றியது.

 4. பிரேமலதா Says:

  @dharanan, நன்றி.
  @seetha
  //long ago, as a young intern witnessed …..அடிக்கடி வீட்டுக்குப்போய் அழுத நாட்கள் அவை//
  How are you now? 🙂

  Law&Order SVU பார்க்குறதுக்கே எனக்கு சிலசமயம் தாங்கல. உங்க professionக்கெல்லாம் செம மன தைரியம் வேணும். வாழ்க.

  @பத்மா.
  நல்லாருக்கான்னு சொல்லலியே. எனக்கே அவ்வளவா பிடிக்கல. 4வது பதிவளவுக்கு இது இல்லை. 🙂

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s


%d bloggers like this: