Archive for செப்ரெம்பர், 2007

பாலனின் செல்லமா?

செப்ரெம்பர் 25, 2007

பெண்குழந்தைன்னு சொல்லிட்டாங்க.  இன்னும் 17 வாரம் இருக்கு  தங்கமினி   (வார்த்தை  உபயம்:  ஜெயஸ்ரீ)  உலகக்  காற்றை  சுவாசிக்க.  இந்த உலகுக்கு வந்ததுக்கப்புறம் பாலனின் செல்லம்னு அப்பாவும் பொண்ணும் சேர்ந்துக்கிட்டு என்னை வெறுப்பேத்தப் போறாங்களா, இல்லை சின்னப் பிரேமலதாவா ஆகி பாலனுக்கு ஒரு தலைவலியா இருக்கப் போகுதா… பொறுத்திருந்துதான் பார்க்கணும். இப்போ நம்ம கடமை ஒரு பேர் தேர்வு செய்றது. 

 நல்லதா ஒரு பேர் சொல்லுங்க. வலை இணைப்புகள்லாம் பார்த்திருக்கிறேன். அதனால, இணைப்பெல்லாம் குடுக்கவேண்டாம் (கொடுத்தாலும் தப்பில்லை). உங்களுக்குப் பிடிச்ச பேரா சொல்லுங்க. கீழ்க்கண்ட என் வரையறைக்ளுக்குள் அடங்கினால் நலம்.

 1. நட்சத்திரம், ராசி, நியூமராலஜி போன்ற எதிலும் எனக்கு நம்பிக்கை கிடையாது. ஆகையால் இது எதும் இல்லாமல் பெயர் பிடித்திருந்தால், பிடித்த காரணத்தைச் சொல்லி பெயரைச்  சொல்லுங்கள்
 2. சின்னதாக வாய்க்குள் நுழையும்படியாக (வாழைப்பழம் அப்படியே முழுதாக வாய்க்குள் நுழையாது தெரியுமோ?), சுலபமாக ஆங்கிலத்தில் எழுத்துக்கூட்ட முடியும்படியாக இருக்கவேண்டும்
 3. பழசோ புதுசோ பரவாயில்லை.
 4. இந்தியப் பேராக இல்லாவிட்டாலும் பரவாயில்லை.
 5. இந்தியப் பெயர்தான் என்றால், தமிழாக இருந்தால் இன்னும் நலம். (4ம் 5ம் முரண்படுகின்றனவோ!) சமஸ்கிருதம் பரவாயில்லை, ஆனால் வெள்ளைக்காரனுக்கு முழி பிதுங்கும்படியாக இருக்கக் கூடாது. (“ஸ்ரீ” இருக்கும் பெயர்கள் பற்றி வெள்ளைக்காரனின் கருத்து: “nice name, if you can get your tongue around it”!!)
 6. தமிழாக இருந்தால் ழ இல்லாத பெயராக இருந்தால் நலம். (ஆங்கிலத்தில் zha என்று எழுதி  “ட்ஸா” என்று தமிழற்றோர் உச்சரிக்கும்போது நன்றாக இல்லை)
 7. சில பெயர்கள் சின்னக்குழந்தைகளுக்கு அழகாய் இருக்கும். அதே குழந்தை வயதான பிறகும் அதே பெயருடன் வாழவேண்டும் என்பதை மனதில் கொண்டு பரிந்துரைத்தால் நலம்.

நன்றி.

Advertisements

யாரு சமையல்?

செப்ரெம்பர் 25, 2007

பாலனாவது சமையலாவது! நான்தான் எல்லாமே. பின்ன? நான்தானே அந்த உப்ப எடு பாலன்,  தேங்காயத் தட்டி எடு பாலன், தாளிச்சுடு பாலன், வடைய இப்படித்ததட்டணும் பாலன்…..

“அடுத்தவாட்டி பாரு கீரை வடை, சிக்கன் வடைன்னு கலக்குறேன். நீ செய்றதெல்லாம் பேசிக் வெர்ஷன்”.

வடை: (மீதம்)
DSCN5119_e

“என்னத்தக் கலக்கினாலும் எனக்குத்தான் எல்லா க்ரெடிட்டும் கிடைக்கும்”.

பின்ன, எவனாவது பாத்திரம் எப்படிக் கழுவுவது-ன்னு தினமும் ஒரு ரெசிப்பி போட முடியுமா? இல்லை தரையை எப்படி துடைப்பதுன்னுதான் போட முடியுமா? கஷ்டப் பட்டு வடையே சுட்டாலும், காம்பினேசன் கரெக்ட்டா இருக்குன்னு நின்னுக்கிட்டு அளவும் பொருளும் சொன்னவளுக்கத்தான எல்லா க்ரெடிட்டும் கிடைக்கும்? (க்ரெடிட்னா “கடன்”னு வேற சொல்றாங்க பொன்ஸ், 😦 ).   அதனாலயே  தன் முத்திரையைப்  பதிக்காம  விடறது  கிடையாதுன்னு  வெங்காயத்தை வட்ட வட்டமா வெட்டி பக்கோடா போட்டா, “அது ஆனியன் ரிங் பாலன், வெள்ளைக்காரன் அயிட்டம் பாலன், ஆனியன் பக்கோடாக்கு கச்சா முச்சான்னு  ஒரு  ஷேப்லதான்  இருக்கணும்”னு   சொல்லச்   சொல்ல   ஆனியன்   ரிங்  போட்டு அலுவலகம் எடுத்துட்டுப்  போய்….  ஏதோ  போகட்டும்,  பொழச்சு.  

செட்டிநாட்டு பட்டாணி குருமா என் உதவியில்லாமல்  செஞ்சு  ஊத்திக்கிச்சு.  அதுக்கு பாவ் வாங்கிட்டு வந்து பாவ் பாஜியை  நினைச்சுக்கிட்டு,  செட்டி நாட்டு குருமாவைத்தொட்டுக்கிட்டு பாவ் சாப்பிட்டுட்டு (நானும்தான்), “வடக்கையும் தெற்கையும் இணைக்க எவெவனோ என்னென்னவோ பாடுபடறான், என்னனயப் பார்த்தியா சுலபமா முடிச்சுட்டேன்”னு என்கிட்ட ரவுசு விட்டதுமில்லாம  போன்போட்டு  சிலர்கிட்ட  வேற  அலப்பல் தாங்கல.

செட்டிநாட்டு பட்டாணி குருமா: 
DSCN5097_e

.

சில்லி பனீர்-ம் என் உதவியில்லாமல் பாறை மாதிரி வந்திருந்தது.

DSCN5105_e

.

DSCN5111போஸ்ட்டில் போட்டோ போடுவதற்காக கேமெராவில் இருந்த படங்களை கம்ப்யூட்டருக்கு  ஏத்தினால்,  குழப்பமா  ஒரு  படம்  வந்துச்சு …  புரியவேயில்லை என்னான்னு …   கொஞ்சம்  மூளையைக்  கசக்கி   கண்டுபிடுச்ச்சால்  (கொஞ்சம்  தெளிவான  படமும்  கிடைச்சது)  இட்லிக்கு மாவரைச்சுடு-ன்னு  சொன்னா,  இந்தமாதிரி வேலையெல்லாம்!!

பச்சை மிளகாய் சுவை – சன்னா – கொண்டைக் கடலை மசாலா

செப்ரெம்பர் 12, 2007

விசிட்டரின் வழிப்போக்கரின் சுவை (taste palate)-ஐ மாற்றும் முயற்சி. முதல்ல கொஞ்சம் ப.மிளகாய்+மிளகாய்த்தூள் (அல்லது வரமிளகாயை  அரைப்பதில் சேர்த்துக்கொள்ளுங்கள்) -இல் ஆரம்பிப்போம். கொஞ்சம் கொஞ்சமாக எல்லாத்துலயும் பச்சமிளகயாய் மாத்திடுவோம்.

எதுக்கெல்லாம் என்னால பேர் வைக்க முடியலையோ அதுக்கெல்லாம் “மசாலா”-ன்னு ஒரு generic பேரை வைச்சிடுவேன்.

இப்போ ரெசிப்பி சமையல் குறிப்பு:

தேவையான பொருட்கள்:
கொண்டைக் கடலை – ஊறவைத்து வேகவைத்தது.
உருளைக் கிழங்கு – விருப்பமிருந்தால் – 2
தக்காளி – 4 அல்லது 5
கரம் மசாலா – 1/2 தேக்கரண்டி
மிளகாய்த்தூள் – 1/2 தேக்கரண்டி
மஞ்சள்தூள்
உப்பு

அரைக்க:
இஞ்சி – 3/4 இன்ச்
பூண்டு – 3 பல்
பச்சைமிளகாய் – 3 அல்லது 4
மல்லித்தூள் (அல்லது வறுத்த மல்லி) – 2 தேக்கரண்டி

தாளிக்க:
எண்ணெய்
கடுகு+உளுந்தம்பருப்பு
வெங்காயம்
கறிவேப்பிலை

செய்முறை:

 1. ஊறவைத்த கொண்டைக் கடலையை நன்றாக குக்கரில் வைத்து வேகவைத்துக் கொள்ளவும்.
 2. உருளைக் கிழங்கை நறுக்கிக் கொள்ளவும்
 3. வெங்காயத்தை சிறுதுண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்
 4. தக்காளியை சிறுதுண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்
 5. அடுப்பில் ஒரு பாத்திரத்தில் எண்ணெய் காயவைத்து கடுகு, உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை போட்டுத் தாளித்து வெங்காயம் வதக்கவும்.
 6. கொ.கடலை, உ.கிழங்கு மற்றும் தக்காளி சேர்க்கவும்
 7. தேவையான அளவு தண்ணீர் சேர்க்கவும்
 8. மஞ்சள் தூள், உப்பு, மிளகாய்த்தூள் மற்றும் கரம் மசாலா சேர்க்கவும்.
 9. மிக்ஸியில் இஞ்சி, பூண்டு, ப. மிளகாய்  மற்றும்  மல்லித்தூள் ஆகியவற்றை  அரைக்கவும்.
 10. அடுப்பில் உள்ள குழம்பில் அரைத்தவற்றையும் சேர்க்கவும்.
 11. நன்றாக காய்ந்ததும் இறக்கிவிடவும்.

மேட்ச் ஃபிக்ஸிங்க் கார்னர்:
சப்பாத்திக்கு நன்றாக இருக்கும்.
சாதத்துக்கும் நன்றாக இருக்கும்.

டிப்ஸ்:
காய்கறி காம்பினேஷன் மாற்றி செய்யலாம்.
வெண்டைக்காய் மற்றும் அதிக தக்காளி போட்டு இதேபோல் செய்தேன்.  நன்றாக இருந்தது.

பி.கு.
போட்டோ இப்போதைக்கு போட முடியாது. அடுத்தமுறை செய்யும் போது  போட்டோ  எடுத்துப்  போடுகிறேன். 

வாழைப் பழ கேக்

செப்ரெம்பர் 11, 2007

ரெசிப்பிலாம் இப்போதைக்குப் போடமுடியாது. இன்னும் கொஞ்சம் கத்துக்கிட்டு வந்து போடறேன். இப்போதைக்கு ஏதோ கேக் மாதிரி ஒண்ணு வந்துச்சு. சாப்பிட நல்லாத்தான் இருக்கு. பரவாயில்லாம மெதுவாத்தான் இருக்கு. இன்னும் மெதுவா வருமோ-ங்கிறது என் சந்தேகம். கேக் செய்வதில் பிஸ்துகள்லாம் இருக்காங்க. கேட்டு செய்துட்டு அடுத்தமுறை டிப்ஸ்களோட வர்றேன். அதுவரைக்கும் பார்த்து புகைவிட இதோ படங்கள்.
DSCN5094
DSCN5096
வாழைப் பழ கேக்-கில் நடுவில் இருப்பது அன்னாச்சிப் பழம்.

ஆத்தா நான் பாஸாயிட்டேன்

செப்ரெம்பர் 11, 2007

ஒரு பரீட்சைக்குப் படிச்சுக்கிட்டிருந்தேன்.  போனவாரம் தேர்வு எழுதினேன். இன்னைக்கு தெரிந்தது ரிசல்ட். பாஸாயிட்டேன்.  🙂

இனி அடுத்த கட்ட பரீட்சைக்குப் படிக்கணும். 😦

கல்லைக்கண்டா நாயக் காணோம்

செப்ரெம்பர் 7, 2007
 1. போளி செய்யபோறேன், ஜெயஸ்ரீகிட்ட ரெசிப்பி வாங்கித்தான்னு கேட்டு (பாலன், நானில்லை. எனக்கெதுக்கு இந்த  விஷப்  பரீட்சை யெல்லாம்)  ரெண்டுவாரமாகுது. நானும் ரெசிப்பி வாங்கிட்டு, வீட்ல இருக்கிற சாமான்லாம் செக் பண்ணிட்டு, வெல்லம் இல்லை வரும்போது வாங்கிட்டு வான்னு சொல்லியாச்சு. இன்னும் வெல்லம் வந்து சேர்ந்தபாடில்லை.
 2. எங்க ஊர் விவசாயிகள் சந்தையில் வாழைப்பழம் ஒரு பெட்டி ஒரு பவுண்டுக்கு வாங்கினோம். (சில சமயம் குறைச்சுக் குடுடா, பாதிப் பெட்டி வாங்கிக்கிறேன், 50 பென்ஸ் போட்டுக்கோன்னாலும் தர மாட்டான்). சரி வாழைப் பழ கேக் பண்ணலாம் என்று பார்த்தால் முட்டை இல்லை. முட்டை வாங்கிட்டு வா-ன்னு சொல்லி ரெண்டு நாள் கழிச்சு முட்டை வந்துச்சு. திரும்பிப் பார்த்தா வாழைப் பழத்தைக் காணவில்லை. தின்று தீர்க்கப் பட்டிருந்தது (நான் ஒத்தே ஒத்தப் பழம்தான் தின்னேன்).
 3. வாழைப்பழம் பெட்டி நிறைய பார்த்தப்போ, கேக் செய்தாலும் தீராது, கொஞ்சம் சிய்யாப்பம் செய்வோம்னு பார்த்தா எண்ணெய் இல்லை. எண்ணெய் வாங்கிவரப் பட்டது. வாழைப் பழம் தீர்ந்துபோய் விட்டது (பாயிண்ட் 2ஐப் பார்க்கவும்).
 4. மேத்தி கீரை (வெந்தயக் கீரை) வாங்கி வைக்கப் பட்டிருக்கிறது. இருவருக்கும் பிடித்த கீரைதான். ஆனால், வெந்தயக் கீரை அகத்திக் கீரைபோல் லேசாகக் கசக்கும் என்பதால் நிலக்கடலை வறுத்துப் பொடித்துப் போட்டு செய்வேன். தேங்காய்த்துருவெலெல்லாம் கூட இந்தக் கசப்பை எடுக்க முடியாது. நிலக் கடலை எடுத்துவிடும். நிலக்கடலை சாப்பிட வேண்டாம் என்று எனக்கு டாக்டர் சொல்லியிருக்கிறார் (குழந்தைக்கு ஆகாதாம்).  ஏற்கனவே இருமுறை இதேபோல் வாங்கி வந்து தேங்காய்த்துருவல் போட்டு செய்து பார்த்து நன்றாக இல்லாமல் ஒருமுறையும், பாலனுக்கு மட்டும் தனியாக நிலக்கடலை போட்டு செய்துவிட்டு இருக்கிறதே ரெண்டுபேர், இதுல தனித்தனியா எப்படி செய்யமுடியும் என்று திட்டி ஒருமுறையும் நடந்து முடிந்திருக்க, இப்போ மறுபடியும் வெந்தயக் கீரை. கீரையை பார்த்ததும் ஒரு ரீகேப் கொடுத்தேன். மண்டையில் ஏறவில்லை. அதோடு கீரையை ஆய்வதற்கு ஒரு இரண்டுமணி நேரமாவது தேவைப் படும். இந்த லட்சணத்தில் மூன்றுகட்டு கீரை வந்திருக்கிறது! கீரை வீட்டுக்கு வந்து இரண்டாவது நாளே புலம்பியாச்சு, கீரை வாடி வீணாப் போகுது இனிமே நான் ஜென்மத்துக்கும் கீரைவாங்க மாட்டேன்னு.
 5. இன்னும் ரெண்டுநாள் கழித்து, முட்டை அப்படியே இருக்கிறது, இனிமே நீ என்ன கேட்டாலும் வாங்கிக் கொண்டு வரமாட்டேன் என்ற ஸ்டேட்மெண்ட் வரும். (update: இரண்டு நாட்கள்   காத்திருக்க வேண்டியிருக்கவில்லை. இந்த போஸ்ட் போட்டது வெள்ளி மாலை. ஸ்டேட்மெண்ட் சனிக்கிழமை காலையிலேயே கிடைத்துவிட்டது!)
 6. ஜெயஸ்ரீயின் முள்ளு முறுக்கு படம் பார்த்துவிட்டு நானும் செய்யலாம் என்று பார்த்தால் அரிசி மாவு கொஞ்சம்தான் இருந்தது. (அரிசிய ஊறவைச்சு அரைக்கிறாங்களா? யாரவங்க? சல்லடையா? அந்த மியூசியத்துல இருக்குமே அதான?!)  இருக்கிறவரைக்கும் செய்யலாம்னு பருப்பெல்லாம் வறுத்து அரைச்சுட்டுப் பார்த்தா எண்ணெய்  ரெம்பவே கொஞ்சமாக இருந்தது. தோல்வியை ஒத்துக் கொள்ள மாட்டேன் என்று,  இருக்கிற எண்ணெயைக்  காயவைத்து முறுக்கு புழிந்த்தால் முதல் பேட்ச் கறுகி விட்டது.  மொத்தமே  ரெண்டு  உழக்கு  மாவுதான். மீதி இருந்த மாவு  கறுகவில்லை யென்றாலும் டேஸ்ட்டாக இல்லை. அப்படியே  பையை எடுத்துக் கொண்டு கடைக்குப் போய் சைனீஸ் டேக்கவே-யில் எனக்கு மிக்ஸ்டு வெஜிடபிள் சௌமின்-னும் (சூப்பரா இருக்கும். எனக்கு  ரெம்பப் பிடிக்கும்) பாலனுக்கு சிக்கன் (and green pepper in black bean and garlic sauce)உம் வாங்கிக் கொண்டு வந்து வைத்துவிட்டு, “சப்பாத்தி மாவு மீதி இருக்கு சப்பாத்தி போட்டுக்க; ஃப்ரிட்ஜில் நேத்து (நேத்தா, முந்தாநேத்தா?) செய்த கோபிமட்டர் இருக்கிறது எடுத்துக்க. பத்தாட்டி  தக்காளி ஊறுகாய் வைச்சுக்க. இந்த சிக்கன் வாங்கிட்டு வந்திருக்கேன். இதையும் சப்பாத்திக்குத் தொட்டுக்கலாம். இல்லை, உனக்கும்  சௌமின் வேணும்னா சொல்லு வாங்கிட்டு வாரேன்”னு சொல்லிட்டு கடையைக் கட்டிட்டேன் 😦